Saturday 6 July 2013

விளம்பர உலகம் - புத்தக விமர்சனம்


விளம்பர உலகம்.
எஸ்.எல்.வி. மூர்த்தி
பக்கம் : 160
வெளியீடு :
விகடன் பிரசுரம்
757, அண்ணா சாலை
சென்னை-600002.

விலை: ரூ.80/-


            பூக்கடைக்கு கூட விளம்பரம் தேவைப் படும் காலம் இது. 'விளம்பரம்' இல்லாமல் இவ் உலகம் இயங்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  விளம்பரம் இன்றி ஒர் அணுவும் அசையாது என்பதுதான் இன்றைய நிதர்சனம். அவ்வகையில் விளம்பரங்களை பற்றிய நிறைய தகவல்களோடு வெளிவந்திருக்கிறது இன் நூல்.

'விளம்பரங்களின் தோற்றங்களும் வின்னைத் தொடும் மாற்றங்களும்' என்ற துணைத் தலைப்பிலேயே விறுவிறு சுறுசுறு தொற்றிக் கொள்கிறது.  துரித ரயில் பயணத்தில் சட்சட்டென்று மறையும் ரயில்வே ஸ்டேஷன் போன்று விளம்பரங்களின்  தோற்றம், வளார்ச்சி, திட்டமிடுதல், வெளியிடுதல், ஓவியம், போட்டோகிராபி, நடிப்பு, புள்ளிவிபரம், உலகை கலக்கிய விளம்பரங்கள், இந்திய சந்தையில் கொடிகட்டி பறந்த விளம்பரங்கள் என்று பக்கங்கள் நம் கண்முன்னால் படபடத்து பறக்கின்றன.  

 
அமுல் விளம்பரத்தில் கொழு கொழு மொழு மொழு சுட்டி பெண்ணை பார்த்திருப்பீர்கள்தானே?.  அமுல் நிறுவனத்தின் அசைக்க முடியாத அடையாளம் அது.   இந்த சுட்டி குழந்தை பிறந்த வருடம் தெரியுமா?.      மும்பையின் 'அட்வர்டைசிங் அண்ட் சேல்ஸ் பிரமோஷன்' கம்பெனியில் 1966ல்தான்  'அமுல் மொப்பட்'  என்ற அமுல் பேபி பிறந்தது.  இயக்குநர் சில்வெஸ்ட்டர் டக்குனா, ஆர்ட் டைரக்டர் யூஸ்டஸ் ஃபெர்னாண்டஸ் இவர்கள்தான் இக் குழந்தையை உறுவாக்கியோர். இன்றுவரையில் இந்த விளம்பர மாஸ்கட் அமுல் தயாரிப்பின் வெற்றிகரமான அடையாளமாக இருந்து வருகிறது.

ஏர் இந்தியா மஹாராஜா, ஏஷியன் பெயிண்ட்ஸ் கட்டூ,  சர்ஃப் பவுடர் லலிதாஜி, ஒனிடா பிசாசு, ஸ்ரீராம் சிட் பண்டு மனிதன், ஆனந்த விகடன் தாத்தா  என்று நமக்கு தெரிந்த விளம்பர அடையாளங்களின் தெரியாத பல சுவராஸ்யமான தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

சுவர் விளம்பரம்,பிரிண்ட் மீடியா (பத்திரிகைகள் மற்றும் வார மாத இதழ்கள்),  ஹோர்டிங்ஸ், டிவி, வானோலி மற்றும் இணையத் தளம் வரை தொழில் நுட்பத்தைக் கை கோர்த்துக் கொண்டு  விளம்பர உலகம் எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறார் இன் நூலின் ஆசிரியர்.

விளம்பர ஏஜென்சிகளை எப்படி தேர்ந்தெடுப்பது?.  எந்த பொருளுக்கு எந்த நடிகரை மாடலாக நடிக்க வைப்பது?.  எந்த சீசனில் எந்த ஊடகத்தில் விளம்பரம் செய்யலாம், என்று புத்தகம் முழுவதும் விளம்பரம் பற்றிய அனுபவ அறிவு,  களஞ்சியமாய் கொட்டிக் கிடக்கிறது.  விளம்பரம பற்றி தெரியாதவர்கள் கூட மிக எளிதில் புரிந்துக் கொள்ளும் வகையில் இப் புத்தகம் வெளிவந்திருப்பது இதன் தனிச் சிறப்பு.

நிச்சயம் நீங்கள் ரிமோட் வைத்து மாற்றமுடியாத நல்லதொரு'விளம்பர'  பிரேக் இது!.

**************
தினமணியில் வந்த புத்தக விமர்சனத்தின் எடிட் செய்யப்படாத பகுதி. எடிட் செய்தது கடந்த திங்களன்று நூல் அரங்கத்தில் வெளிவந்துவிட்டது.

1 comment:

  1. கரந்தை ஜெயக்குமார் அவர்களின் தளத்தின் மூலம் உங்கள் வலைப்பூ கண்டேன்...

    இந்த பதிவை படிக்கும்போது,

    " முறையாக விளம்பரம் செய்தால் பாலைவனத்திலும் மணல் விற்கலாம் " என்ற மார்க்கெடிங் வாசகம் நினைவுக்கு வருகிறது !

    உங்கள் விமர்சனம் புத்தகத்தை உடனடியாக வாங்க தூண்டுகிறது.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    ReplyDelete